கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு கேரளா வனப்பகுதியில் இருந்து சுள்ளிகொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை, சின்னார்பதி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடமாடி வருகிறது.
மேலும், பகல் நேரங்களில் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உலா வந்து சாலையின் குறுக்கே நின்று கொள்கிறது. இதனால், பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகனத்தில் சுழற்சி முறையில் சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை செல்ல அச்சமான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு நவமலை மின்வாரிய குடியிருப்பு அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த அருள்ராஜ் மற்றும் தியாகராஜன் என்ற மின்வாரிய ஊழியர்களின் இரண்டு கார்களை சேதப்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் வாழும் மக்கள் உடனடியாக யானையை பிடித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நவமலைக்கு சென்ற அரசு பேருந்தை வழிமறித்து இந்த சுள்ளி கொம்பன் யானை பேருந்து ஓட்டுனருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நவமலைக்கு இரவு 10 மணிக்கு செல்லும் கடைசி பேருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.