புதுடெல்லி: பிரிட்டனைச் சேர்ந்த பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களுக்கு நேற்று முன்தினம் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அப்போது அங்கிருந்த பிபிசி செய்தியாளர்கள், ஊழியர்களின் செல்போன், லேப்டாப்களை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டனர்.
இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தின் ‘டிரான்ஸ்பர் பிரைசிங்’ விதிமுறையை பிபிசி இந்தியா மீறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்ட போதும் உரிய பதில் அளிக்காததால் இந்த சோதனை நடைபெறுகிறது. குறிப்பாக கடந்த 2012 முதல் கணக்கு வழக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த சோதனை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.
இதனிடையே, வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் படியும், தனிநபர் வருமானம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எனினும், சம்பளம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. அதில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.