அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 81.10% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று (பிப்.16) தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 28.14 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்து 233 என்றும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 99 ஆயிரத்து 289 என்றும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 62 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இவர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 3,337 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. காவல் துறை, துணை ராணுவப் படை ஆகியவற்றின் உதவியுடன் தேர்தல் பாதுகாப்பாக நடத்தப்பட்டது. எனினும், ஒரு சில அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், 81.10% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் திரிபுராவில் 13-ம் தேதி இரவு 10 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்தலை அமைதியாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கிரண் கிட்டி தெரிவித்திருந்தார்.
மும்முனைப் போட்டி கொண்ட இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – திரிபுரா உள்ளூர் மக்கள் கட்சி ஆகியவை ஓர் அணியாகவும், சிபிஎம் – காங்கிரஸ் ஓர் அணியாகவும் களம் கண்டன. திப்ரா மோதா என்ற கட்சி 3-வது அணியாக களமிறங்கியது.
மொத்தம் 807 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 19 தொகுதிகள் பழங்குடி மக்களுக்காகவும், 10 தொகுதிகள் பட்டியல் சமூக மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.