சித்தப்பாவை கெட்ட வார்த்தையில் திட்டுவதா? : தயங்கிய ராணா

பாகுபலி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபதி. கடந்த சில தினங்களாக நில சர்ச்சை ஒன்றில் அவர் மற்றும் அவரது தந்தையின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ராணா மற்றும் அவரது சித்தப்பாவான நடிகர் வெங்கடேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ள ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸ் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

நிஜத்தில் சித்தப்பா – மகனான வெங்கடேஷ், ராணா இருவரும் இதில் தந்தை மகன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த டிரெய்லரை பார்க்கும்போது அப்பாவுக்கும் மகனுக்கும் விரோதம் ஏற்பட்டால், அது எந்த அளவிற்கு செல்லும் என்பதை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது என்பதை உணர முடிகிறது.

இந்த வெப் சீரிஸில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராணா பேசும்போது, “இந்த வெப்சீரிஸில் அப்பா மகன் கதாபாத்திரங்களில் நாங்கள் இருவருமே நடித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் கதைப்படி இருவருமே எதிரும் புதிருமாக இருப்பவர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளில் திட்டும்படியான காட்சிகள் நிறைய இருந்தன. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், கன்னடத்திலும் கூட அதே வார்த்தைகளில் பேசி திட்ட வேண்டி இருந்தது. சினிமா தான் என்றாலும் என் சித்தப்பாவை அப்படி திட்டுவதற்கு தயக்கமாக இருந்தது. பின்னர் எப்படியோ இருவருமே ஒரு வழியாக சமாளித்து நடித்து முடித்தோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.