சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் ஒன்று, சில ஆண்டுக்கு முன்பு, “எங்களிடம் ரூபாய் ஒரு லட்சத்தை முதலீடு செய்தால், மாதம் 15,000 ரூபாய் வட்டியாக தருகிறோம்” என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. அதைப்பார்த்து ஏராளமானவர்கள் நிதி நிறுவனத்தில் தங்களின் பணத்தை முதலீடு செய்தார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் நிதி நிறுவனத்திடமிருந்து ஏஜென்ட்டுகள் மூலம் வட்டியாகப் பணம் கொடுக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்கு 15,000 ரூபாய் கிடைத்ததால், அதை வாங்கியவர்களே தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விவரத்தைச் சொல்லி பணத்தை முதலீடு செய்ய வைத்தனர். அதனால் நிதி நிறுவனத்துக்கு முதலீடுகள் கோடிக்கணக்கில் வரத்தொடங்கியது. அதை வசூலித்துக் கொடுத்த ஏஜென்ட்டுகளுக்கும் கமிஷன் தொகை, ஊக்கத்தொகை என அள்ளிக் கொடுத்தது அந்த நிதி நிறுவனம்.

அதனால் ஏராளமானவர்கள் இந்த நிதி நிறுவன ஏஜென்ட்டுகளாக மாறினர். சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் இந்த நிதி நிறுவனத்தில் தங்களின் பணத்தை முதலீடு செய்தனர். ஏஜென்ட்டுகள், நிதி நிறுவனத்தில் பணியாற்றியவர்களுடன் நிர்வாக இயக்குநர்கள் மாதந்தோறும் நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி, சிறப்பாகச் செயல்பட்ட முகவர்களுக்கு கிஃப்ட்களும் நிறுவனம் தரப்பில் கொடுக்கப்பட்டது. அப்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற முதலீடுகளை வெளிநாட்டிலுள்ள ஆயில் நிறுவன பங்குச்சந்தையில் போட்டியிருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டி பணத்தை நிதி நிறுவனம் சரிவர கொடுக்கவில்லை. அதனால், பணத்தை முதலீடு செய்தவர்கள், முகவர்களுக்கு தொல்லைக் கொடுக்கத் தொடங்கினர்.
இதையடுத்து பொதுமக்களின் டார்ச்சர் காரணமாக முகவர்களில் பெரும்பாலானவர்கள் தலைமறைவாகினர். மேலும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர்களும் தலைமறைவாகிவிட்டனர். நிதி நிறுவனத்தில் உயரதிகாரிகளாக இருந்தவர்களில் சிலர், நிர்வாக இயக்குநர்கள்மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்தனர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள், முகவர்களும் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர்கள்மீது புகாரளித்தனர். சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புகாரளித்திருக்கிறார்கள். அந்த வகையில் 800 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக இருந்த அலெக்ஸாண்டர், சௌந்திரராஜன் உட்பட 21 பேர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. ஆனால் அவர்கள் எல்லாம் இன்றுவரை தலைமறைவாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேரு என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நேரு அளித்த தகவலின்படி மணிகண்டன் என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சூழலில்தான் 2,835 பேரிடமிருந்து 235 கோடி ரூபாய் வரை நிதி நிறுவனத்துக்கு வசூலித்துக் கொடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தி, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி, அண்ணாநகரைச் சேர்ந்த சுஜாதா ஆகிய மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சமீபத்தில் கைதுசெய்திருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தனர். இவர்கள் மூன்று பேர் மட்டுமல்லாமல் இன்னும் சிலர் நிதி நிறுவனத்தில் முக்கிய பதவிகளிலிருந்து பணத்தை வசூலித்துக் கொடுத்தவர்கள். அதனால் இந்த வழக்கிலுள்ள முக்கிய குற்றவாளிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிக்கினால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுக்க முடியும் என்கிறார்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்.