அங்கன்வாடி மையங்களுக்கு வணிக மின் கட்டண முறையை ரத்து செய்ய கோரி ஐசிடிஎஸ் மாநில செயற்குழு தீர்மானம்

மதுரை: அங்கன்வாடி மையங்களுக்கான வணிக மின்கட்டண முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இதில் 41,133 மையங்கள் அரசு கட்டிடங்களில் செயல்படுகிறது. மீதமுள்ள மையங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது.

தமிழக அரசு, தற்போது அங்கன்வாடி மையங்களுக்கு வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டண முறையை அமல்படுத்தியுள்ளது. வாடகை கட்டிடத்தில் இயங்கும் மையங்களுக்கும் வணிக கட்டண முறை அமல்படுத்தப்படுகிறது. இதனால் அதிகபட்சமாக மின் கட்டணமாக ரூ.3 ஆயிரத்துக்கு மேல் அங்கன்வாடி பணியாளர்கள் செலுத்தி வருகின்றனர். இதனை அங்கன்வாடி பணியாளர்கள் செலுத்த தமிழக அரசு கட்டாயப்படுத்துவது அரசு விதிகளுக்கு புறம்பானது.

மேலும், வணிக கட்டணம் அமல்படுத்துவதால் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்குவிட அஞ்சுகின்றனர். எனவே தமிழக அரசு அங்கன்வாடி மையங்களுக்கு வணிக கட்டண முறையை ரத்து செய்து, வீட்டு உபயோக கட்டண முறைக்கு மாற்ற வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்கள் செலுத்திய தொகையை மீள வழங்க வேண்டும். மேலும், அங்கன்வாடி மைய உதவியாளர்களுக்கு மாதம் ஒருநாள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவர் ஆர்.ராணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ச.இ.கண்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் ரா.வாசுகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.