கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு: தமிழக மீனவர் உயிரிழப்பு: போக்குவரத்து நிறுத்தம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அங்கு மீன் பிடிக்க தொடர்ச்சியாக கர்நாடக வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு அப்பகுதியில் மீன் பிடித்த தமிழக மீனவர் பழனி என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக மாநில காவல்துறை இப்போது மீண்டும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளது. அப்போது பழனி என்பவர் உயிரிழந்தார். இப்போது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொளத்தூர் காரைக்காடு ராஜா என்பவர் உயிரிழந்துள்ளார்.

வழக்கமாக மீன்பிடிக்க செல்லும் செட்டிப்பட்டி ரவி உள்ளிட்டோருடன் காரைக்காடு ராஜாவும் மீன் பிடிக்க சென்றுள்ளார். அடிபாலாறு பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இருந்து தப்பித்த அனைவரும் வீடு வந்து சேர்ந்த நிலையில் ராஜா மட்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவரின் உடல் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்களுடன் பாலாற்றில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் உடலைக் கைப்பற்றி விசாரணையை நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில எல்லைகளிலும் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு குறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறை, மான் வேட்டையாட சென்றதால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.