அதானி விவகாரம்..மத்திய அரசின் பரிந்துரையை நிராகரித்த உச்சநீதிமன்றம்.!

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்தவர் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி. குறுகிய காலத்தில் அதானியின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. அதானிக்காக பல்வேறு விதிகள் மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்தன.

இந்தநிலையில் அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. அதன் விளைவாக உலக பணக்காரர்கள் பட்டியலில் மடமடவென சரிந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது நிதி மோசடி குற்றசாட்டுகளை வெளியிட்ட பிறகு, எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை கடுமையாயக விமர்சனம் செய்து வந்தது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்ததோடு, அதானி மற்றும் மோடி இருக்கும் படத்தை காட்டினார்.

இவ்விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதில், முதலீட்டாளர்களின் நலனை காக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பை வலுப்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், அதானி குழுமம் பற்றி ஹிண்டென்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதானி நிறுவனங்களில் எல்ஐசி (LIC), எஸ்பிஐ (SBI) ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் ஏராளமான பொதுமக்களின் பணத்தை முதலீடு செய்துள்ளது குறித்தும் விசாரணை நடத்த வேண்டுமென ஜெயா தாக்கூரின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பிப்ரவரி 24ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால், பிப்ரவரி 17ஆம் தேதி அதானி விவகாரம் குறித்து இரண்டு பொது நல வழக்குகள் விசாரணைக்கு வருவதை ஜெயா தாகூர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, பிப்ரவரி 17ஆம் தேதி ஜெயா தாகூர் தொடர்ந்துள்ள வழக்கு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அதன்படி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பை வலுப்படுத்த நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக மத்திய அரசு சார்பில் சீலிடப்பட்ட கவரில் பரிசீலனை வழங்கப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் நிராகரித்தது.

திரிபுரா தேர்தல் விறுவிறு: 2023-ல் காத்திருக்கும் ட்விஸ்ட்- வியூகம் வகுத்த பாஜக சிஎம் மாணிக் சஹா!

இது குறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “எங்களுக்கு சீல் வைக்கப்பட்ட கவர் எதுவும் வேண்டாம். இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மையும் வேண்டும். மத்திய அரசின் பரிந்துரைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டால், அது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவாகவே பார்க்கப்படும். அதை நாங்கள் விரும்பவில்லை. குழு அமைப்பதை எங்களிடம் விட்டுவிடுங்கள்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.