அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை விசாரிப்பது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி. பார்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

அப்போது சட்ட ஆலோசகர் ஜெனரல் துஷார் மேத்தா, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை விசாரிப்பதற்கான நிபுணர் குழு உறுப்பினர்களின் பெயர்களைப் பரிந்துரைத்து, சீல் செய்யப்பட்ட கவரை அமர்விடம் சமர்ப்பித்தார்.
இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், `சீலிடப்பட்ட கவர் பரிந்துரைகளை நீதிமன்றம் ஏற்காது. முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நாங்கள் சொந்தமாக ஒரு குழுவை நியமிப்போம். அரசு பரிந்துரை செய்த நிபுணர் குழுவை நியமித்தால், அது அரசு நியமித்த குழுவாகவே கருதப்படும்’ என்று அறிவித்தார்.

இதேபோல காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர் இப்பிரச்னை குறித்து மனுவை தாக்கல் செய்திருந்தார். `உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விசாரணைக் குழுவில் நியமிக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டது. அதாவது `நீதிமன்றம் பதவியில் இருக்கும் நீதிபதிகளைக் குழுவில் இருக்க அனுமதிக்காது’ என்று பதிலளிக்கப்பட்டது.
அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம், இம்மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தை எட்டியது. அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்யக் கோரி, இரண்டு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் மற்றும் அனாமிகா ஜெய்ஸ்வால் ஆகியோராலும் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நான்கு மனுக்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.