திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் இலவச தரிசனத்திலும், ஆன்லைன் மூலம் பெறப்படும் ரூ.300 டிக்கெட் மூலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தரிசனத்திற்கு பல மணி நேரம் ஆகிறது. பக்தர்கள் நெரிசலை தவிர்க்க திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஏழுமலையான் கோயிலில் 54,469 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
25,484 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.85 கோடியை காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று காலை முதல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் 31 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் என்பதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.