2026க்குள் குழந்தை திருமணத்தை ஒழிப்போம்; அஸ்ஸாம் முதல்வர் உறுதி.!

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். இந்த சூழலில் அஸ்ஸாமில் சராசரியாக 31 சதவிகித பெண் குழந்தைகள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக, சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

இதையடுத்து, குழந்தைத் திருமணத்திற்கு எதிராக காவல்துறையினரின் மாநிலம் தழுவிய நடவடிக்கை எடுக்க முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டார். குழந்தைத் திருமணம் புரிவோர், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, காவல்துறைக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “அசாம் மாநிலத்தில் குழந்தை திருமண அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதுவரை அசாம் போலீசார், மாநிலம் முழுவதும் 4,004 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் அல்லது போக்சோ சட்டத்தின்கீழும், 14-18 வயதுக்குட்பட்ட டீன் ஏஜ் பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அஸ்ஸாம் அமைச்சரவை முடிவு செய்துள்ளது” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் குழந்தை திருமணத்திற்கு எதிரான இந்த போர், மதச்சார்பற்றதாக இருக்கும் என்றும், எந்த ஒரு சமூகத்தையும் குறிவைத்து இத்தாக்குதல் (நடவடிக்கை) நடைபெறாது என்றும் முதலமைச்சர் கூறினார். மதகுருமார்கள், பாதிரியார்கள் போன்ற திருமணங்களை நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதைத் தொடர்ந்து முதல்வரின் உத்தரவின் பேரில், மாநில காவல்துறையினர் கடந்த 3ம் தேதி முதல் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வகையில் மாநிலம் முழுவதும் குழந்தைத் திருமணம் தொடர்பான வழக்குகளில் முதல்நாளில் 1,800 பேரையும், 2ம் நாளில் 2258 பேர் கைது செய்தனர். அதேபோல் இந்த நடவடிக்கைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

திருமணம் நடைபெற்ற போது தடுக்காமல், குழந்தைகளை பெற்ற பின்னர் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக பெண்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மைனராக இருந்தபோது திருமணம் செய்து வைக்கப்பட்டதால், தனது தந்தை கைது செய்யப்படுவார் என்ற அச்சத்தில், அசாமின் தெற்கு சாலமாரா மஞ்சச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இவர் இரண்டு குழந்தைகளின் தாய் மற்றும் அவரது கணவர் கோவிட்-19 நோயால் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. அதேபோல் கைது செய்யப்பட்ட தனது கணவர் மற்றும் தந்தையை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என 23 வயதான பெண் ஒருவர் கோலக்கஞ்ச் காவல் நிலையத்திற்கு வந்து கூறினார்.

மேலும் துப்ரி மாவட்டத்தின் தமர்ஹட்டில், குழந்தை திருமணம் செய்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அஸ்ஸாம் அரசு பணிவதாக இல்லை. குழந்தை திருமணம் செய்தவர்களை அடைக்க தற்காலிக சிறைகளை அஸ்ஸாம் அரசு ஏற்படுத்தி வருகிறது.

அஸ்ஸாமின் கோல்பாரா மற்றும் கச்சார் மாவட்டங்களில் இதுபோன்ற இரண்டு ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே கோல்பராவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், கச்சாரிலும் இதுபோன்ற மற்றொரு தற்காலிக சிறையும் தயாராகி உள்ளது.

இந்தநிலையில் 2026ம் ஆண்டுக்குள் அஸ்ஸாமில் குழந்தை திருமணம் ஒழிக்கப்படும் என முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘அஸ்ஸாம் அரசு குழந்தை திருமணத்திற்கு எதிரான ஒரு நோக்கத்தில் உள்ளது, மேலும் 2026 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை மாநில அரசு ஒழிக்கும். ஏராளமானோர் காவல் நிலையங்களுக்கு வந்து, முன்கூட்டிய திருமணங்களை ரத்து செய்வதாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கின்றனர்.

சாதி பிரிவுகளை ஆதரிக்கும் இந்துமத நூல்; வடமாநிலங்களில் கலகக் குரல்.!

மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நாங்கள் முழு ஒத்துழைப்பைப் பெறுகிறோம். அதனால்தான் நாங்கள் 3000 பேரை அழைத்து வந்தோம் & அவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அஸ்ஸாமில் ஒரு போராட்டம் கூட இல்லை. தற்போது வரை 58 பேர் மட்டுமே ஜாமீன் பெற்றுள்ளனர், இவ்வளவு பேர் அல்ல. 2026க்குள் குழந்தை திருமணத்தை ஒழிப்போம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.