பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் அமைக்க ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை திரும்பப்பெறும் வகையில், பட்டுக்கோட்டை நகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தில் உள்நோக்கம் உள்ளதாக கூறி, தீர்மானத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூர் : பட்டுக்கோட்டையில் பாலிடெக்னிக் அமைக்க, அதே பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை சங்கத்திற்கு ஒதுக்கி 1983-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை நகராட்சி உத்தரவிட்டது.
ஆனால், அந்த நிலத்திற்கு அரசு நிர்ணயித்த ஒரு கோடியே ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 58 ரூபாயைவாங்க மறுத்த நகராட்சி, பத்திரப்பதிவும் செய்து கொடுக்கவில்லை.
இதனையடுத்து, பாலிடெக்னிக் சங்கத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே, அண்மையில் பாலிடெக்னிக்குக்கு ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை திரும்பப்பெறுவது தொடர்பாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் பாலிடெக்னிக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் தீர்ப்பில், 8 ஏக்கரை பாலிடெக்னிக் சங்கம் வைத்துக்கொண்டு, மீதமுள்ள 12 ஏக்கரை நகராட்சியிடம் ஒப்படைக்கும்படி தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மேல்முறையீட செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சம்மந்தப்பட்ட நிலத்தை எந்த திட்டத்திற்காகவும் நகராட்சி பயன்படுத்தவில்லை. அப்படியிருக்க நிலத்தை திரும்பப்பெறுவது என தீர்மானம் நிறைவேற்றியதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.
மேலும், ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தில் பாலிடெக்னிக் செயல்பட்டு வரும் நிலையில், நிலத்தை திரும்பப்பெற நகராட்சிக்கு உரிமை இல்லை. நகராட்சியின் தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.
ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் உடன், 2009-ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலகட்டத்திற்கு ஆண்டிற்கு 9 சதவீத வட்டியுடன் செலுத்தும்படி பாலிடெக்னிக் நிர்வாகம் செலுத்தி, கிரயம் செய்து கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்.