ஐதராபாத்: ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல கண் மருத்துவமனையின் தலைவர் அமர் அகர்வால் கூறுகையில், ‘இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. சிறு வயதில் குழந்தைகளுக்கு மங்கலான பார்வை ஏற்படுவதற்கான முக்கிய காரணம், ஊட்டச்சத்து குறைபாடு, செல்போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பது, கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவது போன்றவைதான் பார்வை குறைபாடுக்கான காரணமாக உள்ளன.
குழந்தைகளின் பார்வை குறைபாடு பிரச்னைகளைத் தவிர்க்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரமான உணவை வழங்க வேண்டும். இந்தியாவில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களால் சுமார் 1.8 கோடி பேர் கண்பார்வை குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர். கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்றும் அழைக்கப்படும் ‘ட்ரை ஐ சிண்ட்ரோம்’ பாதிப்புகள் ஏற்படக் காரணம், மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை செல்போன்களில் செலவிடுவதால் தான் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, வெப்பநிலை அதிகரிப்பு, விபத்துக்கள் போன்ற காரணமாகவும் கண் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன’ என்றார்.