புதுடில்லி :ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 10 இடங்கள், பொதுமக்கள் வசிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், எதிரி நாடுகளுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அலுவலக ரகசிய சட்டத்தின் கீழ் இந்த அதிரடி முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளால் நாளுக்கு நாள் நமக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட நம் வட கிழக்கு மாநிலங்களின் எல்லை பகுதியில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்துள்ளது.
அதிரடி முடிவு
இதேபோல், ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. சமீப காலமாக உளவு கப்பல், உளவு பலுான் ஆகியவற்றின் வாயிலாக, தங்களுக்கு வேண்டாத நாடுகளை சீனா உளவு பார்த்து வருகிறது.
இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அதிரடி முடிவை நேற்று அறிவித்துஉள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பீஹார், கேரளா ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலும் உள்ள குறிப்பிட்ட 10 இடங்கள், பொதுமக்கள் வரம்பிற்கு அப்பாற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
அதாவது, பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள், நம் எதிரிகளுக்கு சாதகமாக இருக்கும் என உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்படாத நபர்கள் இந்த பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலுவலக ரகசிய சட்டம் -1923ல் அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட இந்த 10 இடங்களும், பொதுமக்கள் வரம்பிற்கு அப்பாற்பட்ட தடை செய்யப்பட்ட பகுதியாக இப்போது முதல் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், அந்த குறிப்பிட்ட 10 இடங்கள் எவை என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.
ஆயுள் தண்டனை
கடந்த 1923ம் ஆண்டின் அலுவலக ரகசிய சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தை, யாரும் அணுகவோ, ஆய்வு செய்யவோ, கடந்து செல்லவோ பயன்படுத்த முடியாது. இந்த பகுதியை பயன்படுத்துவது, எதிரி நாட்டுக்கு உதவுவதாக கருதப்படும். இந்த சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு முதல், ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்