புதுடெல்லி: அரசின் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக எல்பிஜியை இறக்குமதி செய்யும் ஐஓசி பொதுத்துறை நிறுவனம் தற்போது அதானியின் கங்காவரம் துறைமுகத்தை வாடகைக்கு எடுத்திருப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்தததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தினமும் ‘அதானிக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்’ என்ற தலைப்பில் 3 கேள்விகளை எழுப்பி வருகிறார்.
அதில் ஜெய்ராம் ரமேஷ், ‘‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு துறைமுகம் வழியாக எல்பிஜியை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், இந்த துறைமுகத்திற்கு பதிலாக அதானியின் கங்காவரம் துறைமுகத்தை ஐஓசி எல்பிஜி இறக்குமதிக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. ஏலம் இல்லாமல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமம் தனது துறைமுக வணிகத்தை விரிவுபடுத்த பிரதமர் மோடி தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி உள்ளார் என்பது தெளிவாகிறது’’ என கூறி உள்ளார்.