திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நள்ளிரவு கலசபாக்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஏடிஎம் மையங்களில் தொடர் கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டது. இந்த ஏடிஎம் மையங்களில் இருந்து சுமார் 73 லட்சம் ரூபாய் பணத்தை மர்மகும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டது. மேலும் 9 தனிப்படைகளை அமைத்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கொள்ளை கும்பல் ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் பதுங்கி இருப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார் அம்மாநில காவல்துறையினர் உதவியுடன் கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.
மேலும் ஏடிஎம் கொள்ளை நடைபெற்ற பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.
இதற்கிடையே தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படையினர் ஹரியானாவில் கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
அவர்களை தமிழகம் அழைத்து வர தனிப்படை போலீசார் ஹரியானா விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் பணத்தையும் ஏடிஎம் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.