வாஷிங்டன்,’அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறுவதையும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டிக்கிறது’ என, அமெரிக்க செனட் சபையில் அதிரடியான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, நம் அண்டை நாடான சீனா உரிமைக் கோரி வருகிறது.
அருணாச்சல் எல்லையில் அடிக்கடி சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவுவதுடன், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
எல்லைக்கு அருகே சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, குடியிருப்புகளை அமைப்பது போன்ற தொடர் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளைச் சேர்ந்த ஜெப் மார்க்லி, பில் ஹாகர்டி, ஜான் கார்னின் ஆகிய செனட்டர்கள் நேற்று மிகவும் அதிரடியான மற்றும் அரிதான ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.
இதில் கூறப்பட்டுள்ளதாவது:
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது; இது சர்ச்சைக்குரிய பகுதி அல்ல.
இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய நேர்மையை மதிக்கிறோம். இந்தியாவின் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். அதேநேரத்தில், எல்லைப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவுவதையும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டிக்கிறோம்.
இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்மானத் தில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் சீன பெருங்கடல் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதை தடுப்பதற்காகவே, ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, ‘குவாட்’ அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது, சீனாவுக்கு ஏற் கனவே எரிச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம், சீனாவுக்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தும் என, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்