மகா சிவராத்திரி: சதுரகிரியில் குவியும் பக்தர்கள் – எதற்கெல்லாம் அனுமதியில்லை?

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி அமாவாசையை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் நான்கு நாட்கள் மலை ஏறி சென்று சாமிதரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
image
இந்நிலையில், காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது என வனத்துறை அறிவித்துள்ளது. அதேபோல் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மலைக் கோவிலில் இரவில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லாத நிலையில், மகா சிவராத்திரி அன்றுஇரவு நடைபெறும் நான்கு கால பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக கோவில் நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால், கடந்த 16.2.23 ஆம் தேதி கொலுந்தீஸ்வரர் கோவில அருகே தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சதுரகிரி மலைப்பகுதியில் பக்தர்கள் இரவில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது .
image
இதையடுத்து மகா சிவராத்திரியை முன்னிட்டும் தொடர் விடுமுறை காரணமாகவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் சதுரகிரி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இரு மாவட்ட காவல்துறை சார்பாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.