மதுரை மெட்ரோ: 120 நாட்கள் தான்… ரூ.3 கோடியில் வேலையை ஆரம்பித்த தமிழ்நாடு அரசு!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், நவீன மற்றும் சொகுசு போக்குவரத்து அம்சமாகவும் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இதனை பல்வேறு வழித்தடங்களில் விரிவுபடுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வரும் 2026ஆம் ஆண்டு சென்னை வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

குறிப்பாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி 2021 தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்காக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி விரைவாக பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) முன்னின்று செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

மதுரை மெட்ரோ ரயில் சேவை

இந்நிலையில் மதுரை மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 3 கோடி ரூபாய் செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 120 நாட்களில் அறிக்கை தயாரிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எந்த மாதிரியான திட்டம்?

இந்த ரயில் சேவை சென்னையில் இருப்பது போன்று உயர்மட்ட பாலத்தில் அமைக்கப்படுமா? ட்ராம்கள் போன்று சாலைப் பகுதியிலேயே இயக்கப்படுமா? மெட்ரோ லைட் என புதிதாக ஏதேனும் திட்டம் அமல்படுத்தப்படுமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்ட உடன் தெளிவாக தெரியவரும் எனக் கூறுகின்றனர்.

திட்ட அறிக்கை தயாரிப்பு

அதுமட்டுமின்றி திட்டத்திற்கான முழு செலவு, நிலம் கையகப்படுத்துதல், பணிகளை முடிக்கும் கால அளவு, சமூக மற்றும் பொருளாதார காரணிகள் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது. மதுரையில் முதல்கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட திட்டம்

இந்த வழித்தடத்தில் திருமங்கலம், கப்பலூர் டோல் கேட், தர்மத்துபட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்த நகர், மதுரா காலேஜ், மதுரை ஜங்ஷன், சிம்மக்கல், கீழவாசல், தெற்கு வாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் ஆபீஸ், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஊத்தங்குடி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஒத்தக்கடை ஆகிய 20 ரயில் நிலையங்கள் அமைக்க ஆலோசித்து வருகின்றனர்.

தென் தமிழகத்தின் வளர்ச்சி

இதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவையை அமைக்க தீவிரம் காட்டி கொண்டிருக்கின்றனர். மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை வருவதன் மூலம் தென் தமிழகத்தின் வளர்ச்சி அடுத்தகட்டத்திற்கு செல்லும். மதுரையை மையமாக கொண்டு புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும். முதலீடுகள் பெருகும், வேலைவாய்ப்புகள் கிடைக்கும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என எதிர்பார்ப்புகள் வேற லெவலுக்கு சென்றுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.