“வில் அம்பு சின்னத்தை மீட்டிருக்கிறேன்: இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி'' – ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவின் தேர்தல் சின்னமான வில் அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம்

, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு ஒதுக்கியிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இந்த தீர்ப்பு உத்தவ் தாக்கரேயை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த நிலையில், `இது ஜனநாயக படுகொலை’ என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, `உண்மை வெற்றி பெற்றிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி’ எனத் தெரிவித்திருக்கிறார். ஜனநாயக படுகொலை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருப்பது குறித்து அவர், “முடிவுகள் தங்களுக்கு எதிராக செல்லும் போது ஜனநாயக படுகொலை, ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று கூச்சலிடுவது வழக்கம்தான்.

இது இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது. சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் அவர்கள் அடமானம் வைத்திருந்தார்கள். நான் இப்போது அதனை மீட்டிருக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் தன்னிச்சையான ஒரு அமைப்பு. அதனை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக விமர்சிக்கக்கூடாது. தேர்தல் ஆணையத்தின் முடிவு அவர்களுக்கு சாதகமாக வந்தால் ஜனநாயகம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று சொல்வார்கள். இப்போது எதிராக வந்திருப்பதால் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பேசுகிறார்கள். தாக்கரே அணியினர் அனுதாபத்தை பயன்படுத்தி கட்சித் தொண்டர்களை தங்களது பக்கம் இழுக்கப்பார்க்கிறார்கள். பால்தாக்கரேயின் கொள்கைகளும், சிந்தனைகளும் வெற்றி பெற்றிருக்கிறது. எங்களை திருடர்கள் என்று சொல்கிறார். 50 எம்.எல்.ஏ.க்களும், 13 எம்.பி.க்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் திருடர்களா? உங்களை விட்டு சென்ற அனைவரும் திருடர்கள்.

நீங்கள் மட்டும்தான் சரியானவர். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். எங்களது அணியில் அதிக அளவில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருக்கிறது. 2019-ம் ஆண்டு அவர்கள் பால்தாக்கரேயின் சிந்தனைகளை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் விற்பனை செய்துவிட்டனர். 2019-ம் ஆண்டே கட்சிக்கான உரிமையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். நீங்கள் சொத்துக்களுக்கு வேண்டுமானால் உரிமையாளர்களாக இருக்கலாம். ஆனால் பால்தாக்கரேயின் கொள்கைகளுக்கு அல்ல. தேர்தல் ஆணையத்தின் முடிவு பாபாசாஹேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்துக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று தெரிவித்தார்.

சரத் பவார்

இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. முடிவு கொடுக்கப்பட்டுவிட்டால் அது குறித்து விவாதிக்கக்கூடாது. முடிவை ஏற்றுக்கொண்டு புதிய சின்னத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். புதிய சின்னம் மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.