விருதுநகர்: சாத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்குவதோடு பாரம்பரிய கலைகளை கற்று சாதனை படைத்து வருவது பெற்றோர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகே அலமேலு மங்கைபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குழந்தைகளே பெரும்பாலும் படிக்கின்றனர். இவர்கள் ஏட்டுக்கல்வியோடு நிற்காமல் பாரம்பரிய கலைகளையும், அரசியலையும் படித்தும் பொது அறிவை வளர்த்து வருகின்றனர்.
5ம் வகுப்பு படிக்கும் போதே முக்கிய அமைச்சர்களின் பெயர்களை சரளமாக சொல்வது பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது. பாரம்பரிய கலைகளில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு சிலம்பம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகளும் செஸ், கராத்தே உள்ளிட்ட போட்டிகளும் கற்று தரப்படுகின்றன. மாணவர்களின் அசாத்திய திறமைகளை குறித்து அப்பகுதி மக்கள் பேச ஆரம்பித்ததை அடுத்து. அரசு பள்ளியில் 30 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 80ஆக அதிகரித்துள்ளது.