விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே நேர்த்தியாயிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக அ.முக்குளம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அ.முக்குளம் காவல் நிலைய போலீஸார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அ.முக்குளம் அருகேயுள்ள நேர்த்தியாயிருப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 24) என்பவர் காரில் சுமார் 30 கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், மனோகரனை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (23), திருப்பூரைச் சேர்ந்த சரவணன் (26), அபுபக்கர் சித்திக் (20), பிரதீப் (23), கேரளாவைச் சேர்ந்த சரத்குமார் (28), கோவையைச் சேர்ந்த சரவணன்(25), மேலராங்கியம் பகுதியைச் சேர்ந்த கொம்பையா (41) ஆகியோரையும் போலீஸார் அழைத்து விசாரணை செய்தனர்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அ.முக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புறப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து மனோகரன் உட்பட 8 பேரையும் அதிரடியாக கைதுசெய்த அ.முக்குளம் போலீஸார், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்ட எல்லையான அ.முக்குளம் அடுத்த கருவக்குடி பகுதியில் காவல்துறையின் சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தும் கஞ்சா விற்பனையானது கனஜோராக நடந்து வந்தது நரிக்குடி-திருச்சுழி காவல் சரகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப்போல, போலீஸாரின் ரோந்துப் பணியில் ஒரேநேரத்தில் மொத்தமாக 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது இதுவே முதன் முறை எனக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் வட்டத்தில் விசாரிக்கையில், நம்மிடம் பேசிய அதிகாரிகள், “கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க வாகனச் சோதனைகளும், ரோந்துப் பணிகளையும் தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் எங்கிருந்து கஞ்சாவை பெற்று வந்தார்கள். கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.