மூச்சுத் திணறலால் ஏற்பட்ட மாரடைப்பு: புகழ்பெற்ற கிளாசிக்கல் பாடகர் மரணம்

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிளாசிக்கல் பாடகர் விஜய் கிச்சுலுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார்.  மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற கிளாசிக்கல் பாடகர் விஜய் கிச்சுலு (93), வயோதிகத்தின் காரணமாக கொல்கத்தா உட்லண்ட்ஸ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மூச்சுத் திணறலால் அனுமதிக்கப்பட்ட விஜய் கிச்சுலு, சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்தன. கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வாரம் சிகிச்சை பெற்று வந்தார்’ என்று தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையின் துருபத் மற்றும் காயல் ஆகிய இரண்டையும் விஜய் கிச்சுலு அறிந்தவர். கொல்கத்தாவில் உள்ள ஐடிசி சங்கீத் ரிசர்ச் அகாடமியின் நிறுவனராகவும், அதன் தலைவராகவும் 25 ஆண்டுகள் வரை இருந்தார். கலை மற்றும் இசை பிரிவில் கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு அவருக்கு பத்ம விருது வழங்கியது. விஜய் கிச்சுலுவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.