ஈரோடு இடைத்தேர்தல் – பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.

அதன்படி, வருகிற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களைகட்டி உள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், 100க்கும் பணியாளர்கள் வீடு, வீடாகச்சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். வாக்காளர்களுக்கு, வருகிற 25ஆம் தேதி வரை பூத் சிலிப் வழங்கப்பட உள்ளதாகவும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். வாக்குச்சாவடியின் இடம் கண்டறியும் வரைபடம், வாக்குப்பதிவுக்கு தேவையான ஆவணங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலரின் தொடர்பு எண் ஆகியவை பூத் சிலிப்பின் பின் பகுதியில் அச்சிடப்பட்டுள்ளன.

மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இபிஎஸ் ஆதரவு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். அதிமுகவுக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளன. அதேபோல், சில கட்சிகள் தேர்தலில் களம் காணவில்லை. குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் தேர்தலில் போட்டியில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.