மத்திய பிரதேசம் மாநிலத்தில் தேசிய அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, குஜராத், கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின. முடிவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெண்கள் கைப்பந்து அணியும், தமிழ்நாடு போலீஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், 25-23, 25-14, 25-21 என்ற நேர் செட் புள்ளி கணக்கில் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
தேசிய அளவில் சாதனை படைத்த கைப்பந்து வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா சேலம் அழகாபுரத்தில் நேற்று நடந்தது. இதில், சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார், ஆலோசகர் விஜயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்று சேலம் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த கைப்பந்து வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலாதேவி, பொருளாளர் விஜயகுமார், பயிற்சியாளர் பரமசிவம், நிர்வாகிகள் நந்தன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.