விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டித் தெருவில் உள்ளது பத்ரகாளியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில், கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக மஹா சிவராத்திரி தினத்தன்று வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் விநோத நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
மேலும் மஹா சிவராத்திரியன்று திருநீறுக்கு பதிலாக கொதிக்கும் நெய்தான் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றில் பிரசாதமாகப் பூசி விடப்படும். தெய்வ நம்பிக்கை மிகுந்த இந்நிகழ்ச்சியில், சாதாரணமாக யாரும் கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட அனுமதிக்கப்படுவதில்லை.

இதற்காக 40 நாள்கள் கடுமையான விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில், மஹா சிவராத்திரி தினத்தில் நடைபெறும் விநோத நிகழ்ச்சியில் மொத்தம் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும்.
இது குறித்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடம் கேட்டபோது,
“பாசிப்பயிறு, தட்டாம்பயிறு, கருப்பட்டி ஆகியவற்றை உரலில் இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த இனிப்பு உருண்டைக்குத் தேவையான பொருள்களை இடிப்பதற்கும்கூட பெண்கள் நேர்த்திக்கடன் மேற்கொண்டு பயப்பக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.
தொடர்ந்து, மஹா சிவராத்தரியன்று நடைபெறும் விநோத பூஜையில் விரதம் இருந்து கலந்துக்கொண்டு அப்பத்தை வாங்கி உட்கொண்டால் உடலில் இருக்கின்ற நோய்கள் சரியாகும் என்பது நம்பிக்கை.

மேலும் குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். ஆகவே, வெறும் கையினால் கொதிக்கும் நெயில் அப்பம் சுடும் இந்நிகழ்ச்சியைக் காண்பதற்கு ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவர்.

இன்று நடைபெற்ற விழாவில், கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அப்பம் சுட்டு வரும் 89 வயது மூதாட்டி முத்தம்மாள் மற்றும் கோயில் பூசாரிகள் இணைந்து அப்பம் சுட்டு பக்தர்களுக்கு அவற்றைப் பிரசாதமாக வழங்கினர்” என்றனர்.
மஹா சிவராத்திரியையொட்டி, பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த விநோத நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்வின்போது, பக்தர்கள் அனைவரும் உணர்ச்சிப்பொங்க அம்மன் துதிப்பாடல்கள் பாடி மனம் உருக வேண்டிக் கொண்டனர்.