மக்களை அடைத்து வைப்பது புதுமையான யுக்தி.. திமுக செய்வது சரியா? – அதிமுக மாஜி அமைச்சர்

மக்களை அடைத்து வைத்து புதிய தேர்தல் யுக்தியை திமுகவினர் புகுத்தி வருகின்றனர் எஅமைச்சர் தளவாய்சுந்தரம் நாமக்கல்லில் பேட்டி

நாமக்கல்லில் பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்.எல்.ஏவுமாகிய தளவாய் சுந்தரம் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசாக இருந்து வந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், ஈரோட்டிற்கு தேவையாக அனைத்து திட்டங்களையும் செய்தது.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே போல் ஈரோடு மாவட்டத்திற்கு புதிய பாலங்கள், நவீன தொழில்நுட்பம் கொண்ட மருத்துவமனைகள் ஏற்படுத்தி தந்துள்ளார். மேலும் பிராதன பிரச்சனையாக இருந்த குடிநீரை மேட்டூரில் இருந்து கொண்டு வந்து தீர்த்து வைத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது மக்களை பொறுத்தவரை, திமுக ஆட்சியை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் அவர்கள் இல்லை. தற்போதைய திமுக ஆட்சியில், தினசரி 5 கொலைகள், கொள்ளைகள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை இந்த அரசு மூடி மறைத்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் யார் வேலை பார்த்தாலும் மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். ஈரோடு இடைதேர்தலில் மக்களை அதிமுகவினர் சந்திக்காத வகையில், திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர்.

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் புதுமையான தேர்தலை திமுகவினர் புகுத்தி வருகின்றனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களை அடைத்து வைப்பது குறித்து திமுக மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.