சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் அமைந்திருந்த ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜேஎல் கோல்ட் பேலஸ் என்ற நகைக்கடையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அரங்கேறிய கொள்ளை சம்பவத்தில் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடைக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வைத்து உமா மகேஸ்வரன் மற்றும் மஞ்சுநாத் ஆகிய இரு நபர்களை தனிப்படை போலீசார் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி கைது செய்தனர்.
அதன் பிறகு இந்த சம்பவம் குறித்தான எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் அரங்கேறிய இரண்டு நாட்களில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களில் ரூபாய் 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்களால் தமிழக காவல்துறையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கர்நாடகா மாநிலம் கேஜிஎப் பகுதியில் 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஹரியானா மாநிலத்தில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் திருவண்ணாமலை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
சென்னை நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்னும் பிடிபடாத நிலையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. நகை கடையில் கொள்ளையடித்த பின்னர் தப்பிச்சென்ற இடங்கள் தொடர்பான விவரங்களை காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் நகைக்கடை கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்ய சென்னை போலீசார் திருவண்ணாமலைக்கு விரைந்துள்ளனர்.