ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரில் அடுத்தடுத்த வீடுகளில் நடந்த கொள்ளை முயற்சியில், சார்பு ஆய்வாளர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டாளியனில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு கிருஷ்ணன்கோவில் அருகே குண்ணூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். இன்று காலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது இரு பீரோக்களில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
அதே போல் ராஜீவ் காந்தி நகர் 11-வது தெருவில் உள்ள கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த ஹாவில்தார் முத்து மகேஸ்வரன் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், பீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டு சென்றனர். தொடர்ந்து அடுத்த தெருவில் உள்ள தலைமை ஆசிரியை பொன்லெட்சுமி என்பவரது வீட்டின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், உள் கதவை உடைக்க முடியாததால் நகை, பணம் தப்பியது.
சம்பவ இடத்தில் டிஎஸ்பி சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா நேரில் ஆய்வு செய்தனர். இந்த தொடர் கொள்ளை சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோப்ப நாய் ஆதன் மற்றும் கை ரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.