சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வாழ்வாதார உரிமை மீட்பு ஆயத்த மாநாடு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாடு ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். மேலும் பல வருடங்களாக அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருந்து வரும் பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்த வேண்டுமென எடுத்துரைத்தனர்.
தற்பொழுது அமைந்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிடம் பல்வேறு வழிகளில் வலியுறுத்தியும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. அதேபோன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்தியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையின் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்துவது குறித்து தமிழகஅரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அறிவிக்கப்படவில்லை என்றால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக முழுவதும் மார்ச் 5ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதா அல்லது காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதா என்பது குறித்த ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் மூலம் வரும் மார்ச் 5ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.