போபால் : மத்திய பிரதேசத்தில் மஹா சிவராத்திரியையொட்டி கோவிலில் வழிபடச் சென்ற இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 14 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கார்கோன் மாவட்டத்தில் உள்ள சப்ரா கிராமத்தில் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் மஹா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருகை புரிந்தனர். அப்போது, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு சிலர், கோவிலுக்குள் வழிபடச் சென்றனர். அங்கு மற்றொரு பிரிவைச் சேர்ந்தோர், அவர்களை தடுத்து நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றியதால், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதுடன், கோவில் வளாகத்தில் இருந்த கற்களை மாறிமாறி வீசியதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் சமரசம் செய்து வைத்ததுடன், காயம் அடைந்தோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார் அளித்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றம் நிலவுவதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement