
சுந்தர் சி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகல் ?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் காபி வித் காதல் என்கிற படம் வெளியானது. சுந்தர். சியின் வழக்கமான காமெடி ஜானரிலிருந்து விலகி பீல்குட் படமாக உருவாகி இருந்தாலும் அவரது முந்தைய படங்கள் போன்று ரசிகர்களிடம் வரவேற்பு பெற தவறியது. இதை தொடர்ந்து அவர் தனக்கு எப்போதுமே தொடர் வெற்றிகளை தந்து வரும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும், நடிகர் சந்தானம் கிட்டத்தட்ட அவருக்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது, அதை உறுதி செய்யும் விதமாக சில நாட்களுக்கு முன்பு கூட சந்தானம், சுந்தர் சி இருவருமே சேர்ந்து தங்களது பிறந்தநாளை ஒரே இடத்தில் கொண்டாடினர்.
அந்த கொண்டாட்டத்தில் விஜய்சேதுபதியும் கலந்து கொண்டார். அப்போது வெளியான புகைப்படம் வைரலானது. இந்தநிலையில் இந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி தற்போது விலகியுள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. காரணம் தற்போது விஜய்சேதுபதி தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களிலும் ஒரு சில வெப்சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருவதால் சுந்தர்.சி யின் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.