புதுடில்லி திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்து உரிமை உள்ளிட்டவற்றில் நாடு முழுதுக்கும் ஒரே மாதிரியான, பாலின பாகுபாடு இல்லாத சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியுமா என்பது குறித்து ஆராய்வதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்து உரிமை உள்ளிட்டவற்றில், பாலின பாகுபாடு இல்லாமல், பிராந்திய பாகுபாடு இல்லாமல் ஒரே சீரான சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, பொது நலன் வழக்குகள் உட்பட, ௧௭ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பர்த்திவாலா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இது பார்லிமென்ட் மற்றும் அரசு எடுக்க வேண்டிய முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது’ என, அமர்வு குறிப்பிட்டது.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ”பாலின பாகுபாடு இல்லாத சட்டம் இயற்றுவதற்கு எந்த ஆட்சேபனையும், எவருக்கும் இருக்காது. இருப்பினும் அமர்வு இதில் முடிவு செய்யட்டும்,” என குறிப்பிட்டார்.
மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜாரன மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டதாவது:
மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், பொது நலன் மனுவை தாக்கல் செய்துள்ளார். பொதுவான சட்டத்தை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி அவர் கேட்டுள்ளார். இது போன்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் வைக்க முடியுமா?
இந்த விஷயத்தில் மத்திய அரசே முடிவு செய்ய முடியும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த உத்தரவையும், இடைக்கால உத்தரவையும் நீதிமன்றம் பிறபிக்க முடியாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அஸ்வினி உபாத்யாய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் வாதிட்டதாவது:
தனிப்பட்ட முறையில் தான் மனுக்கள் தாக்கல் செய்ய முடியும். பொது நலன் மனு தாக்கல் செய்ய முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.
இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு தனிநபர் மனுவில், ‘பாலின பாகுபாடு இல்லாத தனிநபர் சட்டம் தேவை’ என, ஒரு முஸ்லிம் பெண் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுதும் பொதுவான சட்டம் உருவாக்கும் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து அமர்வு கூறியுள்ளதாவது:
இந்த வழக்குகளில் மத்திய அரசுக்கும், பார்லிமென்டுக்கும் உத்தரவிட முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த வழக்கின் முக்கிய கோரிக்கைகள் குறித்த பட்டியல்களை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதையடுத்து வழக்கின் விசாரணை, நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மனு தள்ளுபடி
திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை, ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் ஒரே சீராக நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பர்த்திவாலா அடங்கிய அமர்வு உத்தரவில் கூறியுள்ளதாவது:இது தொடர்பாக பார்லிமென்டில் தான் சட்டம் இயற்ற முடியும்; நீதிமன்றங்களில் சட்டம் இயற்ற முடியாது. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்