திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உரம் தொடர்பாக தனியார் சில்லரை மற்றும் மொத்த உர விற்பனை நிலையங்களில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் வேளாண்மை இணை இயக்குனர் முனைவர் எல்.சுரேஷ் தலைமையில் திடீர் ஆய்வு செய்ய திருவள்ளூர், எல்லாபுரம், கடம்பத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் பூந்தமல்லி வேளாண்மை அலுவலர் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக்குழு நேற்று தனியார் சில்லரை மற்றும் மொத்த உர விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வு செய்தனர். உர விற்பனை நிலையங்களில் இயற்கை உரங்களுடன் பூச்சி மருந்துகளும் சேர்ந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் மூட்டைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக எண்ணிக்கையில் ஒன்றின் மீது ஒன்றாக தடுக்கப்பட்டு இருந்தது. உர மூட்டைகளில் எடை சரிபார்க்கப்பட்டதில் சில நிறுவன உர மூட்டைகளில் எடை சிறிதளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் உரவிற்பனை நிலையங்களில் அவற்றின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ள விபரம் சரிபார்க்கப்பட்டது. விற்பனை நிலையத்தில் உள்ள இருப்பும், இருப்பு பதிவேட்டில் உள்ள இருப்பும் மற்றும் பிஓஎஸ் இயந்திரத்தில் உள்ள இருப்பும் சரிபார்க்கப்பட்டன. உரங்களின் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் அறிவிப்பு பலகையில் உள்ளது உறுதி செய்யப்பட்டது.
ஒரு தனியார் உர விற்பனை நிலையத்தில் கொள்முதல் பட்டியல்படி கொள்முதல் செய்யப்பட்ட உரம் இருப்பு பதிவேட்டில் பதிவு வைக்கப்படாத காரணத்தினால் அதன் விற்பனையை நிறுத்திவைக்க ஆணை வழங்கப்பட்டது. உரிமம் பெற்ற ஒரு உர விற்பனை நிலையத்தில் பிஓஎஸ் இயந்திரம், முத்திரையிடப்பட்ட எடை தராசு, இருப்பு பதிவேடு இல்லாத காரணத்தினால் உர விற்பனை செய்வது நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் உரம் வாங்க வந்த சில விவசாயிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தியதில் உரங்கள் சரியான விலையில் விற்பனை இரசீதின் படி விற்பனை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது.
மேலும், உரத்துடன் இணைப்பொருட்கள் வாங்க விவசாயிகள் கட்டாயப்படுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. உர விற்பனை உரிமையாளர்களுக்கு உரங்களை அதிக விலைக்கு விற்க கூடாது, இணை பொருட்கள் வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. விதிமீறல் எதுவும் தென்பட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 – ன் படியும் அத்தியாவசிய சட்டம் 1955 – ன் படி மிக கடுமையாக நடவடிக்கையாக உர உரிமம் இரத்து போன்ற நிகழ்வுகள் ஏற்படும் என முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், உரம் மற்றும் இதர இடுபொருட்கள் விற்பனையில் விதிமீறல்கள் அல்லது இடர்பாடுகள் ஏதேனும் தென்பட்டால் விவசாமிகள் அருகாமையில் உள்ள வேளாண்மை விரிவாக்கமைய வேளாண்மை அலுவலர்களையோ அல்லது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் .044 29595152 – ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.