தர்மபுரி மாவட்டத்தில் பழக்கடைக்குள் தனியார் கல்லூரி பேருந்து புகுந்த விபத்தில் தந்தை-மகள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம்டைந்தனர்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (40). இவரது மனைவி விக்னேஸ்வரி. இவர்களுக்கு ஷாசிகா (10) என்ற மகளும், பிரம்மபுத்திரன் (4) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மகன், மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற கர்ணன், தர்மபுரி-கடத்தூர் சாலை ஓரத்தில் இருந்து பழக்கடையில் வீட்டிற்கு தேவையான பழங்களை வாங்கியுள்ளனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக எதிரே வந்த தனியார் பேருந்து மீது உரசி சாலையோர பழக்கடைக்குள் புகுந்தது. இதில் பழக்கடையில் நின்றிருந்த கர்ணன் மற்றும் அவரது மகள் ஷாசிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் அவரது மகன் உட்பட அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த தந்தை-மகள் ஆகிய இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரை கைது செய்தனர்.