சென்னை: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல்களின் அடியாள் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் வன்முறையும், வெறியாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோடி அரசின் அதிகார பலமும், ஆர்.எஸ்.எஸ்-ன் மனித குல விரோத கொள்கையும் அவர்களின் பின்புலமாக இருக்கிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், அவ்வப்போது, அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் கும்பல், கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக மாணவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால், இதுவரை பாரதிய வித்யார்த்தி அமைப்பினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், பொறுப்பற்ற முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வருவதோடு, அக்கும்பலுக்கு துணை நிற்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவர்களை முற்றிலும் ஒழித்து கட்டுவதற்காகவே, இத்தகையை தாக்குதல் அரங்கேற்றப் பட்டிருக்கிறது.
எனவே, தமிழக மாணவர்களை தாக்கிய குண்டர்களை உடனே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.