திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான மேலும் 2 பேருக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 ஏடிஎம் மையங்களில் 72 லட்சத்து 79 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தலைமையிலான நான்கு எஸ்பி உள்ளிட்ட ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக கொள்ளை கும்பல் தலைவன் ஆசிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் ஹரியானாவில் தனிப்படை போலீசார் கடந்த 18-ம் தேதி கைது செய்து, டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு அழைத்து வரப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் விசாரணைக்காக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் அழைத்து வந்து பின்னர் திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆசிப் மற்றும் ஆசாத் இருவரையும் ஆஜர் படுத்தினர்.
நீதிபதி விசாரணையின் பின்பு வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக திருவண்ணாமலை நகர எஸ்டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த குதரத் பாஷா என்பவரையும், அதே போல் கொள்ளையர்களுக்கு தங்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்சர் உசேன் என்பவரையும் திருவண்ணாமலை போலீசார் கைது செய்யப்பட்டு திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் இருவரும் திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி-1 கவியரசன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். குற்றவாளிகளுக்கு நீதிபதி வருகின்ற மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு குற்றவாளிகளும் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.