திருவாரூர்: இரண்டு நாள் பயணமாக தனது சொந்த ஊரான திருவாரூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். சென்னையில் இருந்து இன்று பகல் 11.15 மணிக்கு விமானத்தில் திருச்சிக்குச் சென்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்றுள்ளார். நாளை மன்னார்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்லத் திருமணத்தை தலைமை வகித்து நடத்தி வைக்கிறார்.
இதனிடையே, திருவாரூரில் குளம் ஒன்றில் அமர்ந்து பழைய நினைவுகளை புரட்டியதாக முதல்வர் ஸ்டாலின் தனது வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அந்தப் பதிவில், “கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் கலைஞர்.
இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்!” என்று நெகிழ்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.