புதுச்சேரியில் முதன்முறை: பிப்.25, 26-ல் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கவுன்சில் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரயில் முதல்முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வரும் 25 முதல் 28 வரை நடைபெறுகிறது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வரும் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடக்கிறது. காஷ்மீர் முதல் தமிழகம் வரை உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 150 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில், மத்திய பாஜக அரசை வீழ்த்த, இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வியூகம் வகுக்கப்படும் எனத் தெரிகிறது. வரும் 28ம் தேதி மாநில கட்சி கட்டுப்பாட்டுக் குழு கூட்டமும் நடக்கிறது. புதுச்சேரியில் முதல் முறையாக இந்த கூட்டம் நடக்கிறது.

வரும் 26ம் தேதி நாடு முழுவதும் ஆளுநர் பதவிகளை ரத்துசெய்யக் கோரியும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியும் தேசியளவிலான கருத்தரங்கு நடத்தப்படும். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜா, தமிழக மாநில செயலாளர் முத்தரசன், தேசிய செயலாளர்கள் கானம் ராஜேந்திரன் (கேரளம்), நாராயணா (தெலங்கானா), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார், புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

புதுச்சேரியில் தேர்வு நேரத்தில் ஏழை மக்களின் மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெள்ளை அறிக்கையாக மின்துறை வெளியிட வேண்டும். ரெஸ்டோ பார் கண்டித்து போராட்டம் நடத்தியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஜாமீன் வழங்கியுள்ளனர். இதை கண்டித்து மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும்.

என்ஆர் காங்கிரஸ், பாஜக இடையில் மாநில அந்தஸ்து விவகாரத்தில் முரண்பாடு நிலவுகிறது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி மாநில அந்தஸ்துக்காக ரங்கசாமி போராடினால் அவரோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்” என்று சலீம் கூறினார். இந்நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலை நாதன், பொதுச் செயலாளர் சேது செல்வம், ஏஐடியூசி தினேஷ் பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.