புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு சமீபத்தில் முடிந்தது. இதில் அதானி குழுமம் மீதான புகார் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், மாநிலங்களவை செயலகம் சார்பில் பிப்ரவரி 18-ம் தேதியிட்டு வெளியான செய்தி அறிக்கை:
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவை மரபு மற்றும் விதிகளை மீறி அவையின் மைய பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர். அவைத் தலைவரின் உத்தரவை மதிக்காமல் வேண்டுமென்றே அவை நடவடிக்கைகளை முடக்கும் நோக்கத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைத் தலைவர் அடுத்தடுத்து அவையை ஒத்தி வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் 9 எம்.பி.க்கள், ஆம் ஆத்மி கட்சியின் 3 எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய நடத்தை உரிமை மீறல் பிரிவின் கீழ் வருகிறது. எனவே, அந்த 12 எம்.பி.க்களின் நடத்தை குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறும்போது, “பொதுமக்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்திய ஒரு ஊழல் தொடர்பான உண்மையைத்தான் அவையில் கூறினோம். உரிமை மீறல் தொடர்பான நோட்டீஸ் கிடைத்தால் உரிய பதில் அளிப்போம்” என்றார்.