2011 தேர்தலின்போது தாசில்தாரை தாக்கிய வழக்கு: ஆஜரான அழகிரி… நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் சிலர் இன்று நேரில் ஆஜரானர். இந்நிலையில் வழக்கு விசாரணையை மார்ச் 6 ஆம் தேதி ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன.
image
அப்போது, தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராவுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லீலாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மூன்று சாட்சியங்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் சில வினாக்களை நீதிபதி கேட்டார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 6 ஆம் தேதி ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
image
மு.க.அழகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம், “மதுரை வரும் முதல்வர் உங்களை சந்திப்பாரா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “முதல்வர் மதுரைக்கு வருவது எனக்கு காலையில் தான் தெரியும். என்னை சந்திப்பாரா எனத் தெரியவில்லை” என கூறி சென்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.