அக்னிவீர் திட்டத்தில் நுழைவுத்தேர்வு – திருச்சி மண்டல இயக்குனர் கர்னல் தீபக் குமார் பேட்டி

அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறையில் முதல் கட்டமாக ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு நடத்தவிருப்பதாக ராணுவ ஆள்சேர்ப்பு முகமையின் திருச்சி மண்டல இயக்குனர் கர்னல் தீபக் குமார் பேட்டியளித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு முகமை இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், ”ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி வரை ஆர்வமுள்ளவர்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு நேரடியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
இந்தியா முழுவதும் 176 இடங்களில் இந்த பொது நுழைவுத்தேர்வு நடைபெறும். திருச்சி மண்டலத்தை பொருத்தவரை திருச்சியில் இரண்டு இடங்களிலும், திருநெல்வேலியில் ஒரு இடம் என மொத்தம் மூன்று இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும்.
image
கடந்த முறை நடைபெற்ற தேர்வில் நேரடியாக உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், விண்ணப்பதாரர்களின் சிரமத்தைப் போக்கும் வகையிலும், தேர்ந்தெடுக்கும் முறையை எளிமைப்படுத்தும் வகையிலும் இந்த பொது நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு நுழைவுத் தேர்வு கட்டணம் 500 ரூபாய், இதில் 250 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். 50% செலவை ராணுவம் ஏற்கும்” என கர்னல் தீபக் குமார் தெரிவித்தார். 
பொது நுழைவுத்தேர்வு எந்தெந்த மொழிகளில் நடத்தப்படும் என்ற கேள்விக்கு, ஆங்கில மொழியிலும், இந்தி மொழியிலும் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார். பிற மொழிகளில் தேர்வு இருக்காது என்றும் குறிப்பிட்டார். அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு முகாம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.