லக்னோ,உத்தர பிரதேச அரசை விமர்சித்து, போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் பாடி வெளியிட்ட ‘வீடியோ’ பாடலுக்கு, விளக்கம் கேட்டு போலீசார் ‘நோட்டீஸ்’ அனுப்பினர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, கான்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிய போது, ஒரு குடிசை வீட்டுக்கு போலீசார் தீ வைத்ததில், தாய், மகள் உடல் கருகி பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்பிரச்னை, அம்மாநிலத்தை உலுக்கியுள்ள நிலையில், போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர், உத்தர பிரதேச அரசை விமர்சித்து வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்.
இது, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, கான்பூர் மாவட்ட போலீசார், இன்று (பிப்.22) நேஹா வீட்டுக்குச் சென்று, அவரிடம் நோட்டீஸ் அளித்தனர்.
இதில், ‘உங்களது வீடியோ பாடல் சமூகத்தில் பதற்றத்தையும், துவேஷத்தையும் உருவாக்கியுள்ளது. ‘இது குறித்து, மூன்று நாட்களுக்குள் தகுந்த விளக்கம் அளிக்கவேண்டும். விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், யோகி ஆதித்யநாத் அரசை பாராட்டி, ‘உ.பி.,யில் எல்லாம் இருக்கிறது’ என்ற அர்த்தத்தில், பா.ஜ., – எம்.பி., ரவி கிஷன், ஒரு பாடலை வெளியிட்டிருந்தார்.
நேஹா சிங் ரத்தோர் கான்பூர் தாய் – மகள் இறப்பு விவகாரத்தை குறிப்பிட்டு, ‘உ.பி.,யில் ஒன்றுமில்லை’ என விமர்சித்து வெளியிட்டுள்ள பாடல் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement