சீமான் பரப்புரையின்போது மாடியிலிருந்து கல் வீசி தாக்குதல் – போலீஸ் விசாரணை

சீமான் பரப்புரையின்போது மாடியிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மோதலில் காவல் பணியில் இருந்த 3 போலீசார், 5 நாம் தமிழர் தொண்டர்கள் மற்றும் 6 திமுகவினர் காயமடைந்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சூரம்பட்டி நால்ரோடு பணிமனையில் இருந்து பரப்புரையை துவக்கினார். அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலமானது அரசு மருத்துவமனை சாலை காவேரி சாலை வழியாக பொதுக்கூட்டம் நடக்கும் மேடையை நோக்கி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. வாகனத்தில் நின்றபடி சீமான், வேட்பாளர் மேனகா உள்ளிட்டோர் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரப்பசத்திரம் சாலையில் மாடியிலிருந்து சிலர் சீமான் வாகனத்தின் மீது கல்வீசி தாக்கினர்.
image
இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த மோதலில் காலில் இருந்த பிரபுதேவா, அன்புமணி உள்ளிட்ட மூன்று போலீசார் காயமடைந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் திருப்பித் தாக்கியதில் திமுகவைச் சேர்ந்த ஆறு பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேச பரப்புரை மேடைக்கு வந்த சீமானை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொதுக்கூட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினார்.
image
மேலும் பேசினால் பதட்டமான சூழ்நிலை உருவாகும் என்பதால் அதை தவிர்க்க போலீசார் வற்புறுத்தினர். இருப்பினும் சீமான் 10 நிமிடம் பேசி வாக்கு சேகரித்தார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார். மோதலில் காயமடைந்த இரு தரப்பினரும் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் சசி மோகன் விசாரித்து வருகிறார். பதற்றம் காரணமாக சத்தி கோவை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.