புதுடெல்லி: துணை முதல்வர் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சிபிஐ.க்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு, அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிய, கடந்த 2015ம் ஆண்டு ‘கருத்து கேட்பு குழு’வை அமைத்தது. இக்குழு பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல், இந்த குழுவின் மூலமாக ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநர் சக்சேனாவின் உத்தரவுப்படி இது பற்றி விசாரணை நடத்திய சிபிஐ, அதற்கான அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தது.
அதில், ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை இக்குழு உளவு பார்த்தது, அவர்களை பற்றிய தகவல்களை சேகரித்து வைத்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது. மேலும், இக்குழுவின் தலைவராக இருக்கும் துணை முதல்வர் சிசோடியா மீது இந்த முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அனுமதி கோரியது. சிபிஐ.யின் இந்த கோரிக்கையின் அடிப்படையில் சிசோடியா மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்கும்படி, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் சக்சேனா கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்த நேற்று அனுமதி அளித்தது.