குருகிராம்,ஹரியானாவில், கொரோனாவுக்கு பயந்து மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த பெண் மற்றும் அவரது ௧௦ வயது மகனை நேற்று போலீசார் மீட்டனர்.
ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குருகிராம் மாவட்டம் மாருதி கஞ்ச் பகுதியில் வசிப்பவர் இன்ஜினியர் சுஜன் மஜி. இவருக்கு மனைவி முன்முன் மற்றும் மகன் உள்ளனர்.
கடந்த ௨௦௨௦ல் கொரோனா தொற்று பரவியபோது, பீதியில் முன்முன் தன் மகனுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார். வேலைக்குச் செல்லும் தன் கணவனை கூட வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
எனவே, சுஜன் அருகிலேயே தனியாக ஒரு வீடு பிடித்து, தன் குடும்பத்தை கவனித்து வந்தார். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி வரும் அவர், அவற்றை கதவருகே வைத்து விட்டு சென்றுவிடுவார். தினமும் தன் மனைவி, மகனுடன் ‘வீடியோ கால்’ வாயிலாக பேசி வந்துள்ளார்.
கொரோனா பரவல் முடிந்து, சகஜ நிலைமை திரும்பிய பின்னும் முன்முன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இது குறித்து, சுஜன் தன் மனைவியிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை.
கடந்த மூன்று ஆண்டு களாக தன் மகனையும் வெளியே விட மறுத்துள்ளார். தற்போது, அச்சிறுவனுக்கு ௧௦ வயது ஆகிறது.இதையடுத்து, சுஜன் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் நேற்று சுஜன் வீட்டுக்குச் சென்று, கதவை உடைத்து அவரது மகன், மனைவியை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வினோத சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement