கர்நாடகாவில் பெண் ஐஏஎஸ் ரோஹினி சிந்தூரி மீது குற்றம் சாட்டி ஐபிஎஸ் அதிகாரி ரூபா பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சை

பெங்களூரு: கர்நாடக அரசின் கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநரும், சசிகலாவின் ஊழலை தெரிவித்தவருமான ரூபா ஐபிஎஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை கிளப்பினார். அதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மீது ஊழல், நிர்வாக முறைக்கேடு, ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தாக குற்றம்சாட்டினார்.

இதற்கு ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் ரூபா மீது தலைமை செயலர், மைசூரு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவரும் தனது சமூக வலை தள பக்கத்தில் ரூபாவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என‌ கடுமையாக சாடினார்.

இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட ரூபா ஐபிஎஸ், ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் ஆகிய இருவரையும் கர்நாடக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இருவருக்கும் துறை
ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் புகார் கிளப்புவதற்கும், ஊடகங்களில் பேட்டி அளிப்பதற்கும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மைசூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கங்கராஜூவுடன் பேசும் 25 நிமிட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில் ரூபா, ‘‘ரோஹினி சிந்தூரியின் குடும்பத்தினர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். என் கணவர் மோனிஷ் மோத்கில் நில அளவியல் மற்றும் புள்ளியியல் துறையில் இருந்ததால் ரோஹினி அவரிடம் சில சொத்துக்களின் விபரங்களை கேட்டுள்ளார். நட்பின் அடிப்படையில் சில தகவல்களை என் கணவரும் பகிர்ந்து கொண்டார். கபினி அணைக்கு அருகில் 4 ஏக்கர் நிலத்தின் சர்வே எண்ணை அனுப்பி, இதனை வாங்கலாமா என எனது கணவரிடம் கருத்துக் கேட்டார். அதற்கு என் கணவர் பதில் அனுப்ப மறுத்ததால் அவரை பணி இடமாற்றம் செய்ய ரோஹினி முயற்சித்தார்” என கூறியுள்ளார்.

இந்த ஆடியோவில் ரூபா தன் கணவர் மோனிஷ் மோத்கில் நில விவகாரத்தில் உதவாததால் இடமாற்றம் செய்ய முயற்சித்ததாக குற்றம்சாட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.