அதிமுக பொதுக்குழு வழக்கு: அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பு தொடர்ந்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இதன் காரணமாக அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் கட்சியை விட்டு நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஜூலை 11 ஆம் தேதி கூடிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பு அளித்தது.
இதனையடுத்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பு எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறையீடு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பின் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையி்ல், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பின் மீது அனைவரின் கவனம் இருக்கிறது.