புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் துணை முதல்வரான மணிஷ் சிசோடியாவின் நிர்வாகத்தில் டெல்லியின் விஜிலன்ஸ் துறை செயல்படுகிறது.
இதன் சார்பில் கடந்த 2015-ல் ‘ஃபீட்பேக் யூனிட் (எஃப்.பி.யு)’ எனும் புதிய பிரிவை அவர் தொடங்கினார். இதன் சார்பில் டெல்லியில் நடைபெறும் ஊழல்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர் அறிவித்தார். ஆனால் இந்த எஃப்.பி.யு ஆம் ஆத்மியின் அரசியல் ஆதாயத் திற்காக பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை உளவு பார்த்ததாக புகார் கிளம்பியது. இந்நிலையில் இப்புகாரை விசாரிக்க மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பதிவில், ‘எதிரிகள் மீது போலி வழக்குகள் பதிவு செய்வது என்பது, பலம் இழந்தவரின் கோழைத்தனமான செயல். ஆம் ஆத்மி கட்சி வளர்ச்சியால் மேலும் பல வழக்குகள் எங்கள் மீது பதிவாகும். ஊழலை தடுக்க எஃப்.பி.யு தொடங்கப்பட்டது. இதன் மீது ஊழல் தடுப்பு சட்டப்படி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது. இதை டெல்லியின் முதன்மை செயலாளருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பி தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்தப் புகார் மீது டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் பரிந்துரையின் பேரில் சிபிஐ பூர்வாங்க விசாரணை நடத்தியது. இதில், அப்பிரிவை துவக்கும் ஆலோசனைக்காக டெல்லி அரசு, இதுவரை ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்கவில்லை என தெரியவந்தது. மேலும் சில ஆதாரங்களின் அடிப்படையில், எஃப்.பி.யு தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சிபிஐ உறுதி செய்தது. இதையடுத்து, மணிஷ் சிசோடியா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது.
சிபிஐயிடம் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஏற்கெனவே ஒரு வழக்கில் சிக்கி விசாரணை தொடர்கிறது. இது, டெல்லியின் புதிய கலால் வரிக் கொள்கை தொடர்பான வழக்கு ஆகும். இக்கொள்கையில் செய்யப்பட்ட மாற்றத்தால் பல தொழிலதிபர்கள் பலன் அடைந்ததாக ஆம் ஆத்மி அரசு மீது ஊழல் புகார் கிளம்பியது. இத்துறையும், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் கீழ் வருகிறது.
மணிஷ் சிசோடியாஇந்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், அவர்கள் ஆதரவு பெற்ற தொழிலதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வழக்குகளும் பொய்யானவை என ஆம் ஆத்மி கூறியுள்ளது. எனினும் இந்த வழக்குகளால் மணிஷ் சிசோடியா கைதாகும் சூழல் நெருங்குவதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.