ஈரோடு கிழக்கு: திமுக, நாம் தமிழர் இடையில் மோதல் வெடித்தது எப்படி? கள ரிப்போர்ட்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரச்சாரம் ஓய்கிறது. இதையொட்டி இறுதிகட்ட பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று இரவு 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான்
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையொட்டி வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கலந்து கொள்ள வந்த தொண்டர்களின் வாகனங்களுடன் சீமான் அணிவகுத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திமுகவை சேர்ந்த தொண்டர்கள் சிலர் வந்துள்ளனர். உடனே நாம் தமிழர் கட்சியினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பதிலுக்கு திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து வாகனங்களில் இருந்து கீழே இறங்கி திமுகவினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இது கைகலப்பாக மாறி தள்ளுமுள்ளு வரை சென்றது. திடீரென நாம் தமிழர் கட்சி தொண்டர்
திமுக
தொண்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு திமுகவினர் கட்சிக் கொடி மற்றும் இரும்பு குழாய்களை வைத்து சரமாரியாக தாக்க தொடங்கினர். மேலும் நாம் தமிழர் கட்சியினரும் கட்சி கொடிகள் உடன் தாக்க ஆரம்பித்தனர். இதனால் இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் மண்டை உடைந்தது.

காரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடியையும் உடைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. இதுபற்றி தகவலறிந்து ஆயுதப்படை போலீசார் விரைந்து வந்தனர். இரு தரப்பையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் வாக்குவாதம் முடிவுக்கு வந்தபாடில்லை.

அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு தொண்டர்களை திமுகவினர் இழுத்து சென்று விட்டதாகவும், அவர்களை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் திமுகவினர் அப்படி எதுவும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் சீமான், வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோரின் வாகனம் வந்தது. ”போலீசார் விரைந்து வாருங்கள்.

திமுக குண்டர்கள் கலவரம் செய்கிறார்கள். போலீசார் வாகனங்களுக்கு முன்னால் வரவும். அன்பு மக்களே பாருங்கள். இதுதான் திராவிட அரசியல். திராவிட கட்சிகள் செய்த சாதனை. இந்த குண்டர்களை ஏவி ஒரு தூய அரசியலை சாக்கடை ஆக்கியது. நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் விவசாயி என்று கூறி விட்டு சீமான் சென்றார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீசார் வந்தனர். விரைவாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.